புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் : சிக்கலான முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை வெற்றி!
புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக, மிகவும் சிக்கலான முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 25ஆம் திகதி இடம்பெற்ற இந்த அறுவை சிகிச்சை, பிராந்திய மருத்துவ சேவையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இத்தகைய சிக்கலான சத்திரசிகிச்சைகள் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் இரத்தினபுரி போன்ற வரையறுக்கப்பட்ட சில போதனா வைத்தியசாலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஒரு தள வைத்தியசாலையில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பது முதல் முறையாகும்.
கடந்த சில மாதங்களாக முள்ளந்தண்டு தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தாலும், ‘நேராக்கல்’ சத்திரசிகிச்சை இங்கு நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.
புத்தளம் தள வைத்தியசாலையின் என்பு முறிவு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷெஸார் ஹமீத் தலைமையிலான மருத்துவக் குழுவே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அவருக்கு துணையாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் டாக்டர் உடாய் டி சில்வா, லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் டாக்டர் நிர்மல் மரசிங்க மற்றும் மயக்க மருந்து விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சமிந்த ஆகியோரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
தனியார் வைத்தியசாலைகளில் சுமார் 40 இலட்சம் ரூபாவிற்கும் மேல் செலவாகும் இந்த சத்திரசிகிச்சை, அரச வைத்தியசாலையில் ஏழை எளிய மக்களுக்காக முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி, புத்தளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிகப்பெரிய நன்மையாக அமைந்துள்ளது.
மேலும், எதிர்காலத்திலும் இத்தகைய உயர்தர சிகிச்சைகளை புத்தளம் தள வைத்தியசாலையிலேயே தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், அண்மையில் இவ்வைத்தியசாலை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
