எரிபொருள் வழங்க மறுத்த ஊழியரின் கன்னத்தில் அறைந்த சாரதி!


கெஸ்பேவ - பண்டாரகம வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் வழங்க மறுத்த ஊழியரை கார் சாரதி தாக்கியதாக கெஸ்பேவ பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் அமுலில் இருந்த வாகன இலக்கத் தகட்டு கட்டுப்பாட்டின்படி, ஒற்றை எண்ணுடைய வாகனத்திற்கு எரிபொருள் வழங்க ஊழியர் மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சாரதி, அந்த ஊழியரின் கன்னத்தில் தாக்கியதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காரின் இடது பக்க இருக்கையில் இருந்த பெண்ணை காட்டி, அவர் எரிபொருள் கூட்டுத்தாபன அதிகாரி என கூறி எரிபொருள் பெற முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஊழியர் அதனை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன இலக்கத் தகவலின் அடிப்படையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் உதவியுடன் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபரான சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.