பிரதமர் ஹரிணியின் பெயரை வைத்து மோசடி செய்த நபர் கைது!
கொழும்பு - பொரள்ளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களைச் சேர்க்க முயன்ற போலி நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று (21) அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் பொரள்ளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தன்னை பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தனிப்பட்ட செயலாளரின் கணவர் எனக் கூறி பாடசாலை அதிபரை அணுகியுள்ளார். மேலும் தன்னை இலங்கை விமானப்படையின் ‘விங் கமாண்டர்’ எனவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சுதந்திர தின விழாவில் வானில் இருந்து பாராசூட் மூலம் குதித்ததாகவும் கூறி அதிபரின் நம்பிக்கையை பெற முயன்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விமானப்படை அதிகாரிகள் மற்றும் பிரதமரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றும் தனது மனைவி எனக் கூறி போலியான புகைப்படங்களையும் (AI மூலம் உருவாக்கப்பட்டவை என சந்தேகிக்கப்படுகிறது) காண்பித்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையிலிருந்து வீடுகள் பெறப்பட்டுள்ளதாக கூறி, அதில் இரண்டு வீடுகளை அதிபருக்கு பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். இதற்காக விண்ணப்பப் படிவங்களையும் வழங்கியுள்ளார்.
பின்னர் சந்தேகம் எழுந்ததால் பாடசாலை அதிபர் பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். மேற்கொண்ட விசாரணையில், அத்தகைய பெயரில் தனிப்பட்ட செயலாளர் எவரும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடத்தி சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அவர் மீது பல முந்தைய வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
