இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு!
தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையர்களின் ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் மூலம் பல தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
நாளை (24) தொடங்கும் உலக நோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு வைத்தியர் பாலித கருணாபேம இந்த தகவல்களை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
“ஏப்ரல் 24 முதல் 30 வரை உலக நோய் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்புத் திறனில் இலங்கை உயர்ந்த நிலையைப் பெற்றுள்ளது.
1978ஆம் ஆண்டு முதல் தேசிய தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் குழந்தைகள் பல ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
போலியோ, புதிதாகப் பிறந்த குழந்தைகளில் ஏற்படும் டெடனஸ் (Neonatal Tetanus) மற்றும் ருபெல்லா போன்ற நோய்கள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளன.
மேலும், தடுப்பூசிகள் பல்வேறு நோய்களைத் தடுக்கும் முக்கியமான பாதுகாப்பாக அமைந்துள்ளன.
இதன் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரித்ததுடன், குழந்தை இறப்பு வீதமும் குறைந்துள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.
