இலங்கை மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!


ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் நேற்று (22) பிற்பகல் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினர்.

இந்த உரையாடலின்போது, ‘ஐரிஸ் தேனா’ போர்க்கப்பல் குழுவினரை மீட்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாய்நாட்டிற்கு கொண்டு செல்ல வழங்கிய உதவியையும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் பாராட்டினார்.

அத்துடன், அமெரிக்காவும் சியோனிச ஆட்சியும் ஈரானுக்கு எதிராக மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தார். ‘தேனா’ போர்க்கப்பல் மீதான தாக்குதலை அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட “முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம்” என அவர் விவரித்தார்.

மேலும், 1949 ஜெனீவா உடன்படிக்கைகளின் அடிப்படை விதிகளை மீறியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தை ஈரான் ஒருபோதும் மறக்காது என்றும், இதற்கு பொறுப்பானவர்களை சட்ட மற்றும் அரசியல் வழிகளில் எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனுடன், இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசித்தனர்.