பட்டாசு சத்தத்தால் 10,000க்கும் மேற்பட்ட விலங்குகள் பாதிப்பு - விலங்கு நல நிபுணர்கள் எச்சரிக்கை!
பண்டிகை கொண்டாட்டங்களின் போது பயன்படுத்தப்படும் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விலங்கு நல நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக நாய்கள் மற்றும் பூனைகள் செவித்திறன் சேதம், திசை உணர்வு இழப்பு மற்றும் கடுமையான பயம் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுடன் ஒப்பிடுகையில், விலங்குகளின் கேள்வித் திறன் மிகவும் அதிகமாக உள்ளது. நாய்கள் சுமார் 60,000 ஹெர்ட்ஸ் (Hz) வரை ஒலிகளை உணரக்கூடியவை; பூனைகள் அதைவிட அதிகமாக, 85,000 ஹெர்ட்ஸ் வரை ஒலிகளை உணர முடியும். இதனால், மனிதர்களுக்கு சாதாரணமாகத் தோன்றும் சத்தங்களே விலங்குகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தக்கூடியதாக மாறுகின்றன.
பட்டாசுகள் பொதுவாக 120 முதல் 175 டெசிபல் (dB) வரையிலான ஒலியை உருவாக்குகின்றன. 140 டெசிபல் அளவிலான சத்தமே விலங்குகளின் செவிக்கு கடுமையான வலியையும் நிரந்தர சேதத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த திடீர் வெடிச்சத்தங்கள் காரணமாக பல செல்லப்பிராணிகள் பயந்துவிட்டு வீடுகளை விட்டு தப்பிச் செல்லுகின்றன. இதனால் அவை வழிதெரியாமல் போவதோடு, வீதி விபத்துகளில் சிக்கும் அபாயமும் அதிகரிக்கிறது. சில சமயங்களில், இவ்வாறு தப்பிச் சென்ற விலங்குகள் மீண்டும் உரிமையாளர்களிடம் திரும்ப முடியாமல் போகும் நிலையும் உருவாகிறது.
மேலும், அதிக சத்தம் காரணமாக விலங்குகளில் மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக அவை உணவு உட்கொள்ளாமல் இருப்பது, உடல் நல குறைபாடுகள் ஏற்படுவது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.
இந்த பாதிப்பு வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு மட்டுமல்ல. பறவைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பட்டாசுகளால் ஏற்படும் அதிர்வு மற்றும் சத்த அலைகள் காரணமாக பறவைகளின் கூடுகளில் உள்ள முட்டைகள் சேதமடையலாம். மேலும், செவித்திறன் பாதிப்பால் பறவைகள் உணவு தேடுவதிலும், திசை கண்டறிவதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றன.
விலங்கு நல நிபுணர்கள் மேலும் சுட்டிக்காட்டுவதாவது, கொண்டாட்டங்கள் மற்ற உயிரினங்களின் துயரமாக மாறக்கூடாது என்பதாகும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் பாதுகாப்பாக வாழும் உரிமை உள்ளதால், எதிர்காலத்தில் பட்டாசுகளுக்குப் பதிலாக சூழல் நட்பு மற்றும் அமைதியான கொண்டாட்ட முறைகளைப் பயன்படுத்துவது அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
