மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோர் - விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வழங்கும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்கு பதிலாக மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் வழங்கிய பதிவு இலக்கங்களுக்கு மாற்றாக, விதிமீறிய இலக்கங்களுடன் சில வாகனங்கள் இயக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.
புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு உரிய பதிவு இலக்கங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சில வாகன உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி வெவ்வேறு நிறங்களில் பதிவு இலக்கங்களை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையருக்கு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், விதிகளை மீறும் சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
