டிஜிட்டல் மயமாகும் அரச அலுவலகங்கள் - புதிய இடைக்கால வழிகாட்டல்கள் வெளியீடு!
இலங்கையில் நிலவும் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் மற்றும் பிராந்திய அரசியல் பதற்றங்களை கருத்தில் கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தொலைதூர முறையில் முன்னெடுக்க புதிய இடைக்கால வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள போர்க்கால சூழ்நிலை காரணமாக தேசிய எரிபொருள் கையிருப்புக்கு ஏற்பட்ட அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், அரச அலுவலக பணிகளை பகுதியளவில் தொலைதூர வேலை (Remote Working) முறைக்கு மாற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் பொது நிர்வாக அமைச்சும் இணைந்து புதிய வழிகாட்டல்களை தயாரித்துள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான அரச சேவை முகாமைத்துவக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள், தங்களது தினசரி அலுவலக பணிகளை டிஜிட்டல் முறையில் முன்னெடுக்க தேவையான தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொலைதூர சேவை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டல்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் இதனை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
