மீண்டும் திட்டமிட்ட ரீதியிலான நீர்வெட்டு - வெளியான முக்கிய அறிவிப்பு!
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையை கருத்தில் கொண்டு, திட்டமிட்ட நீர்வெட்டை மீண்டும் அமுல்படுத்துமா என்பது குறித்து எதிர்வரும் 19 ஆம் திகதிக்குப் பின்னரே தீர்மானிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதுவரை அவ்வாறான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அச்சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நீடிக்கும் வறட்சி காரணமாக, கிடைக்கப்பெறும் குறைந்தளவிலான நீர்வளத்தை முறையாக முகாமைத்துவம் செய்யும் நோக்கில், கடந்த 2 ஆம் திகதி முதல் பகுதிவாரியாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம, பாதுக்க உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டம் கட்டமாக நீர்விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டது.
எனினும், சித்திரை புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில், கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் இந்த நீர்வெட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பண்டிகைக் காலத்திற்குப் பின்னர் நிலவும் வானிலை நிலைமைகள் மற்றும் நீர் கையிருப்பு தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில், அடுத்த கட்ட நீர்விநியோகம் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
