நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: புத்தாண்டு விளையாட்டு விழாக்களுக்கு சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!


நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையை முன்னிட்டு, புத்தாண்டு விளையாட்டு விழாக்களை ஏற்பாடு செய்யும் போது அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விளையாட்டுத்துறை வைத்திய நிபுணர் ருவான் ஜயசூரிய, வெளிப்புறங்களில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளை காலை 10.00 மணிக்கு முன்பாகவே நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்தார்.

எதிர்வரும் புத்தாண்டு விழாக்களில் மரத்தான் ஓட்டம், சைக்கிள் ஓட்டம் உள்ளிட்ட பல வெளிப்புற விளையாட்டுகள் இடம்பெறவுள்ள நிலையில், நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் நேரத்தை சரியாகத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும். குறிப்பாக நேரடி சூரிய ஒளியில் நடைபெறும் விளையாட்டுகள் காலை 10.00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், மாலை நேர நிகழ்வுகள் பிற்பகல் 03.00 மணிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்படுவது சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இவ்வாறான போட்டிகளில் பங்கேற்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். அதிக களைப்பு, தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றினால், அது வெப்பம் அதிகரித்ததற்கான சுட்டிக்காட்டாக இருக்கக்கூடும். அத்தகைய சூழலில் உடனடியாக விளையாட்டை நிறுத்தி, நிழலான இடத்திற்குச் சென்று ஓய்வு எடுத்து தண்ணீர் குடிப்பது அவசியம்.

இதனுடன், விழா ஏற்பாட்டாளர்கள் விளையாட்டு மைதானங்களில் குளிர்ந்த நீர், ஐஸ் கட்டிகள் போன்ற முதலுதவி வசதிகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.