நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் அதிக வெப்பநிலையை முன்னிட்டு வானிலை ஆய்வுத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிக வெப்பமான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் காலப்பகுதியாக இருப்பதால், ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், நாட்டின் 21 மாவட்டங்களில் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை, அதாவது ‘வெப்பக் குறியீடு’, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்கள் சோர்வு, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகளை அனுபவிக்க வாய்ப்புள்ளது. மேலும், தொடர்ந்து உடல் உழைப்பு மேற்கொள்ளும்போது வெப்பத்தால் தசைப்பிடிப்புகள் ஏற்படவும் சாத்தியம் உள்ளது.
இதனை முன்னிட்டு பொதுமக்கள் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். முடிந்தவரை நிழலில் தங்கவும், இடையிடையே ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இலகுவான, வெளிர் நிற ஆடைகளை அணிவதும், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகள் மற்றும் அதிக உடல் உழைப்பைத் தவிர்ப்பதும் அவசியமாகும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
