மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை!


ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான அதிகரித்துவரும் பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்த உயர் மட்டச் சந்திப்பில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் அதிபரின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் கலந்து கொள்கின்றன. இதனை முன்னிட்டு இஸ்லாமாபாத் நகரம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த புதன்கிழமை எட்டப்பட்ட இரண்டு வார தற்காலிக போர் நிறுத்தத்தை, நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற்றுவதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும். மேலும், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் 10 அம்சத் திட்டத்தை ஈரான் முன்வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் பிரதமர் ஷஹ்பாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர்.

வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகையை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முக்கிய பாதுகாப்புப் பகுதிகளுக்குள் பொதுமக்கள் நுழைவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவசர நிலைகளை எதிர்கொள்ள முக்கிய மருத்துவமனைகள் மற்றும் மீட்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ள போதிலும், லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள கடுமையான தாக்குதல்கள், இந்த மத்தியஸ்த முயற்சிக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.