மதுபானம் அருந்த பணம் தராத தாயை படுகொலை செய்த மகன்!
மட்டக்களப்பு, சித்தாண்டி பகுதியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் கோரிய நிலையில் ஏற்பட்ட வாக்குவாதம் துயரமான முடிவை எட்டியுள்ளது.
சந்திவெளி பொலிஸாரின் தகவலின்படி, 19 வயது இளைஞர் ஒருவர் தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். தாயார் பணம் இல்லை என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த அவர் தாயைத் தள்ளியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த தாயின் தலை தரையில் பலமாக மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 42 வயதுடைய குமாரசாமி வசந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சித்தாண்டி 4ஆம் பிரிவு, பழைய சந்தை வீதியைச் சேர்ந்தவராகும்.
சம்பவத்தையடுத்து தப்பியோடிய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சந்திவெளி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
