மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!


மிகிந்தலை, மருதன்குளம குளத்தில் நேற்று (17) மதியம் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், இரு சிறுவர்களைக் காப்பாற்ற முயன்ற தந்தை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மருதன்குளம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய இந்த நபர், தனது நண்பருடன் குளத்துக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு நீராடிக்கொண்டிருந்த அவரது மகன் மற்றும் மற்றொரு சிறுவன் திடீரென நீரில் மூழ்கியதை கவனித்துள்ளார்.

அவர்களை காப்பாற்றுவதற்காக உடனடியாக நீரில் குதித்த நிலையில், எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், சம்பவத்தில் சிக்கிய 11 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.