மயக்க மருந்து வழங்கி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்கள் ; போதகர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!
முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட போதகர் உட்பட மூவருக்கும் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பான தகவலின்படி, சிறுவர் அபிவிருத்தி திட்ட ஊழியர்களை ஒன்றிணைத்து வவுனிக்குளம் பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின்னர், 20 மற்றும் 21 வயதுடைய இரண்டு பெண்கள் வாகன வசதி இல்லாததால் மதபோதகரின் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
பயணத்தின் போது அவர்களுக்கு மயக்க நிலை ஏற்பட்டதாகவும், மயக்க மருந்து கலந்த பானம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த நிலையை பயன்படுத்தி கூட்டு பாலியல் முயற்சி நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் மல்லாவி பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி மற்றும் மற்றொருவர் முதலில் கைது செய்யப்பட்டனர். பின்னர் மதபோதகரும் கைது செய்யப்பட்டார். மூவரிடமும் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டன.
கைது செய்யப்பட்ட மூவரும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
