எரிபொருள் விநியோகத்திற்கான கியூ.ஆர் குறியீடு முறைமை தொடர்பில் வெளியான தகவல்!


உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக, நாட்டில் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையினால், குறிப்பாக உலக எரிபொருள் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் காரணமாக, உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்ததாவது, உலகளாவிய எரிபொருள் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறைமையின் கீழேயே சில்லறை எரிபொருள் விநியோகம் தொடரும் என தெரிவித்துள்ளார். தேவைக்கேற்ப இந்த முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் கொடுப்பனவு முறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குதல், வாகன வகைகளுக்கு ஏற்ப எரிபொருள் அளவை திருத்தம் செய்தல், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு எரிபொருள் மானியங்களை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய விநியோகத் தடைகள் இருந்தபோதிலும், உள்நாட்டு சந்தையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எதிர்கால நெருக்கடிகளை சமாளிக்க இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.