நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் “அம்பர்” நிலை எச்சரிக்கை!
நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் “அம்பர்” நிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (21) பிற்பகல் வெளியிடப்பட்டதுடன், இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களுடன் மன்னார், வவுனியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, உள்ளகப் பகுதிகளில் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு கூறப்பட்டுள்ளது. மரங்களின் கீழ் நிற்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடி முழக்கத்தின் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கம்பி இணைப்புள்ள தொலைபேசி மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின் உபகரணங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
துவிச்சக்கரவண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழக்கூடிய மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
