நிதி அமைச்சில் சைபர் கொள்ளை : சில அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - CID விசாரணை தீவிரம்!


நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்பிற்குள் சைபர் ஊடுருவலாளர்கள் (hackers) அத்துமீறி நுழைந்து மேற்கொண்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.

2026 ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளின் போது கண்டறியப்பட்ட சந்தேகத்திற்கிடமான தகவல்களின் அடிப்படையில் இம்மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, நிதி அமைச்சு உடனடியாக இலங்கை கணினி அவசர நிலை பதில் குழு (SL-CERT) மற்றும் இலங்கை பொலிஸின் கணினி குற்றப் புலனாய்வு பிரிவு (CCID) ஆகியவற்றிற்கு தகவல் வழங்கியுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வழியாக உத்தியோகபூர்வ முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு (FIU) யிடமும் சம்பந்தப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சின் உள்வாரி விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், சில அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதால், அவற்றிற்கு இடையூறு ஏற்படாத வகையில் மேலதிக தகவல்கள் பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு நாடுகளுடன் செய்யப்பட்டுள்ள உடன்படிக்கைகளின் அடிப்படையில் சர்வதேச ஒத்துழைப்புடன் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.