ஹந்தானை மலைப்பகுதியை படம் பிடிக்கச் சென்ற யூடியூபர் மாயம்!


கண்டி – ஹந்தானை மலைப்பகுதியில் வீடியோ பதிவு செய்யச் சென்று காணாமல் போன யூடியூபர் ஒருவர் இராணுவத்தினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் முன்பு ஹந்தானை பகுதியில் வசித்து பின்னர் கொழும்பில் குடியேறியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யூடியூப் செயற்பாட்டாளரான அவர், மலைப்பகுதிகளில் ஏறி அரிய காட்சிகளைப் படம் பிடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் குறிப்பிடப்படுகிறார்.

ஹந்தானை மலைத் தொடரின் மிக உயர்ந்த பகுதியாகக் கருதப்படும் “ஓணான் முதுகு” அல்லது “கட்டுஸ்ஸ கொண்ட” பகுதியில் அவர் சிக்கியிருப்பதாக கண்டி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியின் ஆபத்தான நிலைமை காரணமாக மீட்பு நடவடிக்கை கடினமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கண்டி பொலிஸார் கலஹா மற்றும் பேராதனை பொலிஸ் நிலையங்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இந்நடவடிக்கையில் இராணுவத்தின் 111ஆவது காலாட்படைப் பிரிவின் 2ஆவது (சுயாதீன) சிங்க ரெஜிமண்ட் படையணியும் இணைந்தது.

பின்னர், இராணுவத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் மற்றும் எட்டு பேர் கொண்ட குழு சவாலான தேடுதல் மற்றும் மீட்பு பணியை முன்னெடுத்து, கடும் இருள் மற்றும் பனிமூட்டத்திலும் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டது.

இறுதியாக, எந்தவித காயங்களும் இன்றி, குறித்த யூடியூபரை பாதுகாப்பாக இன்று காலை நேரத்தில் மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.