எரிபொருள் மற்றும் மின்விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!


எரிபொருள் மற்றும் மின்விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறினார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களையும் பொருட்படுத்தாமல், நாட்டின் வலுசக்தி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் இறக்குமதிக்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போதைய பூகோள நெருக்கடியை முன்னிட்டு எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட வேண்டும், மின்விநியோகம் துண்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சிலர் தவறான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குகிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார்.

நிலக்கரி இறக்குமதி தொடர்பாக ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால், அவற்றை ஆதாரங்களுடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்வைக்கலாம் என்றும், வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைப்பது பொருத்தமல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் மின்விநியோகம் வழமையானபடி தொடரும் என்றும் அவர் மீண்டும் உறுதியளித்தார்.