புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பஸ்கள் சேவையில்!
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, இன்றைய தினத்திலும் கூடுதல் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வழமையான பஸ் அட்டவணைக்கு மேலதிகமாக சுமார் 1,500 பஸ்கள் கொழும்பிலிருந்து இயக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்தன. இன்றும் பயணிகளின் வருகையைப் பொருத்து தேவையான அளவில் பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றும் நாளையும் ரயில் சேவைகள் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், கொழும்பிலிருந்து இயங்கும் அனைத்து கடுகதி ரயில்கள், தபால் ரயில்கள் மற்றும் நகராந்திர கடுகதி ரயில்கள் வழமையானபடி இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
