தரம் 1 மாணவர்களுக்கான செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
2026ஆம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களின் II மற்றும் IIIஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தப் புத்தகங்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விநியோகித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரம் 1 பாடத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் மாகாண ஆரம்பக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேவையான கூடுதல் பயிற்சிகளை எதிர்வரும் மே 16ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தரம் 1 முதலாம் தவணைக்குரிய பாடப்பகுதிகளை முழுமையாக கற்பிக்க முடியாத பாடசாலைகள் இருப்பின், அவற்றை இரண்டாம் தவணையில் பூர்த்தி செய்ய அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
