அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு!
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், இலங்கையில் அடுத்த ஒன்றரை மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அரிசி, கோதுமை மா, சர்க்கரை மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டு கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வெங்காயம், பருப்பு வகைகள், ரின் மீன் மற்றும் வாசனைத் திரவியங்கள் வழமையான விநியோகப் பாதைகள் ஊடாகத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கடல் வழி விநியோகப் பாதைகளில் பாரிய இடையூறுகள் இதுவரை ஏற்படவில்லை என தெரிவித்த பிரதி அமைச்சர், சில கப்பல்கள் வருகை தருவதில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என ஜனாதிபதி அண்மையில் எச்சரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இருப்புக்கள் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவித்தாலும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி உள்ளூர் சந்தையில் பொருட்களின் விலைகள் ஏற்கனவே 5% முதல் 10% வரை அதிகரித்துள்ளன.
கப்பல் கட்டண அதிகரிப்பு மற்றும் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மத்திய கிழக்கு போர் நீண்ட காலத்திற்குத் தொடருமானால், அதன் பாதிப்புகள் சர்வதேச சரக்கு போக்குவரத்து வலையமைப்பின் ஊடாக இலங்கையின் உணவு இறக்குமதியை நேரடியாகப் பாதிக்கக்கூடும் எனவும், அதுவரை தற்போதைய கையிருப்பு போதுமானது எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
