3 மாதங்களுக்குள் அறிக்கை கிடைத்தால் இவ்வருடம் தேர்தல் உறுதி!


மாகாண சபைத் தேர்தல் நடத்தும் முறைமை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழு, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பித்தால், இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் தாமதம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை கூறினார்.

2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமையில் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடையாததால் கடந்த பல ஆண்டுகளாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயல்பட்டு வருகின்றன.

பழைய விகிதாசார முறைமையில் தேர்தலை நடத்தலாமா அல்லது புதிய கலப்பு முறைமையில் நடத்தலாமா என்பது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே விளக்கம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் முறைமை மற்றும் சட்ட திருத்தங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழு மே மாதத்துக்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

அறிக்கை கிடைத்தவுடன் தேவையான சட்ட அதிகாரங்களை பயன்படுத்தி தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும், இதன் மூலம் நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.