நாடு முழுவதும் திட்டமிட்ட மின்தடை!


இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க நடவடிக்கையால் நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, 12,000 க்கும் மேற்பட்ட மின்தடைகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம், அனுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மதியம் மற்றும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், கொழும்பின் சில பகுதிகளிலும் நேற்று காலை மின்தடை பதிவாகியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து சுமார் 25 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

மின்சார சபையை புதிய நிறுவனங்களாக மாற்றும் செயல்முறையின் போது ஊழியர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவில்லை என்பதே இந்த போராட்டத்திற்கான பிரதான காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது.