எரிபொருள் நெருக்கடி: பாடசாலைகள் மூடப்படுமா? - வெளியான அறிவிப்பு
எரிபொருள் நெருக்கடி, விலை அதிகரிப்பு மற்றும் QR குறியீடு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டமை போன்ற காரணங்களால் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தவோ அல்லது தொலைதூரக் கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தவோ இதுவரை கல்வி அமைச்சு எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மூடுவது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று தொடரும் என்றும் கல்வி அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், நாட்டில் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதில் நிலவும் சவால்களை சமாளிக்கும் நோக்கில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா, பல அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்து கொண்டார்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் அதன் விளைவாக எரிபொருள் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசியத் துறைகளில் ஏற்படக்கூடிய தாக்கங்களை கருத்தில் கொண்டு, முக்கிய பொதுச் சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
