கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்வு!
உள்ளூர் சந்தைகளில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக பஸ்டியன் மாவத்தை கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.ஐ.எம். இக்பால் தெரிவித்ததாவது, சந்தையில் நேற்று (15) நிலவரப்படி கோழி இறைச்சி ஒரு கிலோவின் விலை 1,400 ரூபாவாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சந்தையில் சமீப காலமாக ஏற்பட்ட விலை ஏற்ற, இறக்கங்களின் தொடர்ச்சியாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சில்லறை விற்பனையாளர்களும் நுகர்வோரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக வர்த்தக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் பல பொருட்களின் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாத நிலையாக இருப்பதாகவும், இருப்பினும் அந்த நிலையை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
