உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை பகிரங்கப்படுத்தப்போவதாக உதய கம்மன்பில அறிவிப்பு!


அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31ஆம் திகதி நாட்டிற்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

சுமார் ஒன்றரை வருட காலமாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் “உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி” எனும் ஆய்வு நூலைத் தாம் தயாரித்துள்ளதாகவும், அந்த நூலை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கடந்த ஏழு ஆண்டுகளாக அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கங்கள் அமைக்கப்பட்டதோடு சில அரசாங்கங்கள் கலைக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், எந்தவொரு உறுதியான அடிப்படையும் இன்றி இராணுவத்தினரை துன்புறுத்துவதற்கும் இந்தத் தாக்குதல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இப்போது இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டதாகவும் வலியுறுத்தினார்.