ஏவுகணைத் தாக்குதல்களை அதிகரித்த ஹிஸ்புல்லா அமைப்பு – வடக்கு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!


நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியங்களில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்களது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஹைஃபா, நஹாரியா, எக்கர், கலிலி, அஃபுலா, கர்மேல் மலைத்தொடர், நாசரேத் மற்றும் திபேரியா உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள், லெபனான் திசையிலிருந்து வரக்கூடிய தாக்குதல்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் சில உள்பகுதிகளில் சில குழுக்களால் ஏற்படக்கூடிய ஆத்திரமூட்டும் சம்பவங்கள் தொடர்பிலும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீப காலமாக ஈரானிலிருந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் குறைவு காணப்படுவதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு இஸ்ரேல் பிராந்தியத்தில் 9,000-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதால், அந்நாட்டு பாதுகாப்புப் படைகள், அரச ஊடகங்கள், PIBA நிறுவனம் மற்றும் இலங்கைத் தூதரகம் வழங்கும் அனைத்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஏதேனும் தாக்குதல் சம்பவம் ஏற்பட்டால் இஸ்ரேலின் அவசர எம்புலன்ஸ் சேவையை இலவசமாகப் பெற முடியும். நீங்கள் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு 101 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அந்த சேவையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான மேலதிக தகவல்கள் அல்லது உதவிகளுக்காக தூதரகத்தின் WhatsApp இலக்கம் 00972-559305731 மூலம் வாரத்தின் ஏழு நாட்களும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.