தினசரி இயங்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறையும் அபாயம்!
இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் மூலம் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் Gemunu Wijeratne தெரிவித்துள்ளார்.
டிப்போக்கள் ஊடாக மட்டும் எரிபொருள் வழங்கப்பட்டால், தினசரி இயங்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறையும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டில் சுமார் 13,000 தனியார் பேருந்துகள் உள்ள நிலையில், தற்போதைய நடைமுறையினால் 6,500 பேருந்துகளை மட்டுமே இயக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிப்போக்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லையெனவும், இதனால் நீண்ட வரிசைகள் மற்றும் சேவை தாமதங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
டிப்போக்களில் இரவு நேரங்களில் டீசல் வழங்கப்படாததும், மாலை 5 மணிக்கே டிப்போக்கள் மூடப்படுவதும் பேருந்து சேவைக்கு பெரும் சிக்கலாக மாறும் எனக் கூறினார்.
பேருந்துகள் தினசரி சேவையை நிறைவு செய்த பின்னரே எரிபொருள் பெற வருவதால், டிப்போக்கள் முன்கூட்டியே மூடப்பட்டால் அடுத்த நாள் சேவையில் ஈடுபட முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலை தொடர்ந்தால், இலங்கை முழுவதும் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
உலகளாவிய நெருக்கடியை புரிந்துகொண்டாலும், பொதுமக்கள் பெரும்பாலும் அரச மற்றும் தனியார் பேருந்துகளிலேயே பயணிக்க வேண்டியிருப்பதால், பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
