எரிபொருளைப் பெற சுற்றுலாத் துறைக்கென விசேட QR குறியீடு!
வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இலங்கையில் எரிபொருளைப் பெறுவதற்காக QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் துறைக்கு எரிபொருள் வழங்குவதற்காக தனிப்பட்ட QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இன்று (16) மாலைக்குள் சுற்றுலாத் துறைக்கான இந்த விசேட QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த முடியும் என அதிகாரிகள் நம்புவதாகக் கூறினார்.
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்தவித சிக்கலும் இல்லாமல் தங்களது பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்குவதற்காக இந்த விசேட QR முறை அறிமுகப்படுத்தப்படுவதாகவும், அதற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பிராந்தியத்தில் நிலவி வரும் மோதல் சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 25% முதல் 30% வரை குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
