36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் கொழும்பை வந்தடைந்த இந்திய கப்பல்!
இந்திய அரசின் விசேட ஒத்துழைப்புடன், இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான பெரிய எரிபொருள் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகம் வந்தடைந்துள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1:30 மணியளவில் “ஹரி ஆனந்த” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் துறைமுகத்தை வந்தடைந்ததாக துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தக் கப்பல் மூலம் மொத்தமாக 36,000 மெற்றிக் தொன் எரிபொருள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில்,
- 18,000 மெற்றிக் தொன் டீசல்
- 18,000 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல்
என்பன அடங்குகின்றன.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட இராஜதந்திர உறவுகளின் பலனாக, இந்த எரிபொருளை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு வழங்க இந்திய எண்ணெய் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
மேலும், எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் பல்வேறு நாடுகளிலிருந்து மேலும் 10 எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடின்றி விநியோகத்தை தொடர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போதுள்ள டீசல் கையிருப்பு ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை போதுமானதாக இருப்பதாகவும், ஜூன் மாதம் வரை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில் பெற்றோல் கையிருப்பு இருப்பதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
