நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு!


நாட்டில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது ஒரு பெரிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நாலக ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுநீரக தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

சிறுநீரக நோய்கள் பொதுவாக நாட்பட்ட நோய்களாக காணப்படுவதுடன், ஆரம்ப நிலையில் தெளிவான அறிகுறிகள் தெரியாததால், நோய் தீவிரமடைந்த பின் மட்டுமே அறிகுறிகள் வெளிப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் சிறுநீரக நோய்களுக்கு அதிக ஆபத்தில் உள்ளவர்கள் என்பதால், அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கையில் சுமார் 25 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரு நோய்களும் சிறுநீரக நோய்களின் முக்கிய காரணிகளாகும் எனவும் தெரிவித்தார்.

இந்நோயை ஆரம்ப நிலையில் இரத்த மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, முறையான சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார்.

ஆனால் நோய் தீவிரமடைந்தால், இரத்த சுத்திகரிப்பு (Dialysis) அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

தற்போது நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 10 சதவீதமானோர், அதாவது 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நோய் கண்டறியப்படாத பலரும் சமூகத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.