இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்தது
2026ஆம் ஆண்டில் சுமார் 310,000 இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கீழ் செயல்படும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அதிகளவான தொழிலாளர்கள் குவைத் நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 77,500 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
ஐக்கிய அரபு இராச்சியம் – 63,500 பேர்
கட்டார் – 44,000 பேர்
சவுதி அரேபியா – 31,000 பேர்
என தொழிலாளர்கள் அனுப்பப்படவுள்ளனர்.
நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் மூலம்,
இஸ்ரேல் – 15,000 பேர்
ஜப்பான் – 12,500 பேர்
தென் கொரியா – 6,000 பேர்
ஆகிய நாடுகளுக்கும் 2026ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2025ஆம் ஆண்டில் 300,000 வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த இலக்கை மீறி 311,207 தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், 2025ஆம் ஆண்டில் இலங்கைக்கு 8,000 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான புலம்பெயர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் 20,484 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
