இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு!
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போது, இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாணத்திற்குப் பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் அளவில் தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட நீர் ஊற்று இலங்கையில் கண்டறியப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.
இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் மடு பகுதியில் அமைந்திருந்தது. அங்கு ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றர் அளவில் நீர்வரத்து பதிவாகியிருந்தது.
பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அவற்றுக்கிடையிலான இடைவெளிகள் வழியாக நிலத்தடி நீர் இருப்பிடங்களை நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறிந்த பின்னரே இந்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நீராதாரத்தின் மூலம் பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர்த்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
.webp)