பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!


தற்போதைய கடும் வெப்பமான வானிலை நிலைமையில் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செயல்படுவது அவசியம் என கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

வெப்பமான வானிலையால் ஏற்படும் சுகாதார அபாயங்களைத் தவிர்ப்பது எப்படி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில், நேற்று (13) சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், பாடசாலை விளையாட்டு நடவடிக்கைகளின் போது வெப்பமான வானிலை நிலையை கருத்தில் கொண்டு போட்டிகளை குறைப்பது, மாணவர்களுக்கு அடிக்கடி ஓய்வு வழங்குவது, அவர்களை நிழலான அல்லது குளிர்ச்சியான இடங்களில் தங்கவைத்தல் மற்றும் போதிய அளவு நீர் அல்லது உப்பு கலந்த பானங்களை வழங்குதல் மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தற்போது நிலவும் கடும் வெப்பத்தின் பாதிப்புகளை குறைக்க சூழ்நிலையை சரியாக அறிந்து தேவையான சிகிச்சைகளை பெறுவதும் அவசியம் என குறிப்பிட்டார்.

குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடும் வெயில் காணப்படும் நேரமாக இருப்பதால், அந்த நேரத்தில் விளையாட்டு போட்டிகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிள்ளைகளுக்கு அடிக்கடி இடைவேளை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பிள்ளைகள் தொடர்ச்சியாக விளையாட விரும்பினாலும் அதனை அனுமதிக்காமல், விளையாட்டுகளுக்கு இடையில் ஓய்வு வழங்கி நிழலான அல்லது குளிர்ச்சியான இடங்களில் தங்கவைத்து அதிகளவு நீர் மற்றும் ஆரோக்கியமான பானங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு செய்யப்படாவிட்டால் உடல் வெப்பம் அதிகரித்து மயக்கம், சோர்வு, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.

மேலும் இந்த அறிகுறிகளை புறக்கணித்தால் உடல் வெப்பம் அதிகரித்து ‘வெப்ப அதிர்ச்சி’ (Heat Stroke) எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகலாம் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு பிள்ளைக்கு மயக்கம், சோர்வு, தலைச்சுற்றல் அல்லது குழப்ப நிலை ஏற்பட்டால் உடனடியாக அவரை வெயில் உள்ள இடத்திலிருந்து அகற்றி குளிர்ச்சியான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். நீர் அருந்த முடியுமானால் வழங்க வேண்டும். நிலைமை தொடர்ந்தால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுவது அவசியம் என அவர் தெரிவித்தார்.