உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர் ஹரிணி!
நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்காக கல்வியில் முதலீடு செய்வது அவசியம் என பிரதமர் தெரிவித்தார். திறமையான மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில், உயர்தரப் பரீட்சையில் அதியுயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்கும் புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது பிரதமர் இதனை தெரிவித்தார். இந்நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (12) இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
இந்த திட்டத்திற்காக மொத்தமாக 4,001 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2025 முதல் 2033 வரை மொத்தம் 200 மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக 2025/2026 கல்வியாண்டிற்காக 32 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 9 மாணவர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், மொனாஷ் மற்றும் நியூசிலாந்தின் ஓக்லண்ட் போன்ற உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் இணைந்து கல்வி கற்று வருகின்றனர்.
இந்த புலமைப்பரிசில் பெறும் மாணவர்கள் உலகத் தரவரிசையில் QS, THE அல்லது ARWU பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களில் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும்.
தெரிவு செய்யப்படும் ஒரு மாணவருக்காக ஆண்டுக்கு அதிகபட்சமாக 20 மில்லியன் ரூபாய் வரை நிதி வழங்கப்படும். நான்கு வருட பட்டப்படிப்பிற்காக மொத்தமாக 80 மில்லியன் ரூபாய் வரை செலவிடப்படவுள்ளது.
நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், இது ஒரு சாதாரண புலமைப்பரிசில் திட்டம் அல்ல; நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய செயற்திட்டமாகும் என தெரிவித்தார். மாணவர்கள் கல்வித் திறமைகளுடன் மட்டுமல்லாமல் தலைமைத்துவம், நல்ல ஆளுமை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடம் போன்ற பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் வெறும் பட்டதாரிகளாக மட்டும் திரும்பி வராமல், சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர்களாக உருவாக வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
.webp)