இ.போ.ச பஸ்ஸில் இருந்து மாணவர்களை இறக்கிய நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்


ஹட்டனுக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) பஸ்ஸில் பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள், நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

பஸ் நடத்துனருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெறும் வரை அவர் சேவையில் மீண்டும் இணைக்கப்பட மாட்டார் என்றும், பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொள்கை வகுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இப்படியான செயல்களை அரசாங்கம் அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள் ஏறிய போது, அவர்களை இறங்குமாறு கூறிய பஸ் நடத்துனர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியதன் பின்னர், இது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கினிகத்தேனை-கடவளை பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸில் ஏறிய போது, அவர்கள் சீசன் டிக்கெட் வைத்திருந்ததால் பஸ் நடத்துனர் அவர்களை இறங்குமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் மாணவர்களுக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.