அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
சுமார் 7 வருடங்களின் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக எதிர்வரும் மே மாதத்தில் திறந்த போட்டிப் பரீட்சை நடத்தப்படும் என்று அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள போட்டி பரீட்சைக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் அதிகாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 130,000க்கும் மேற்பட்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2200 பேர் அரச சேவையில் இணைக்கப்படுவார்கள்.
தற்போது, முகாமைத்துவ அதிகாரிகளுக்கான 4,000 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டிலேயே இறுதியாக முகாமைத்துவ அதிகாரிகள் அரச சேவைக்கு இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.