கொழும்பு மற்றும் மட்டக்களப்பு இடையேயான தொடருந்து சேவை தொடர்பில் வெளியான புதிய நேர அட்டவணை
கொழும்பிலிருந்து (Colombo) மட்டக்களப்பிற்கான (Batticaloa) தொடருந்து சேவையில் இன்று (07.03.2025) முதல் புதிய நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம், கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்குடன் மற்றும் காட்டு யானைகளின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள ஒரு புதிய திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக அமல்படுத்தப்பட்ட நேர அட்டவணையின் படி:
- பாடுமீன் கடுகதி தொடருந்து இன்று காலை 6:15க்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 3:30க்கு கொழும்பை சென்றடையும்.
- புலத்தசி தொடருந்து, மட்டக்களப்பிலிருந்து நள்ளிரவு 1:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
- மேலும், புலத்தசி தொடருந்து கொழும்பிலிருந்து பிற்பகல் 3:15க்கு புறப்பட்டு, நள்ளிரவு 12:00 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
இதுவரை, கொழும்பிலிருந்து 7:00 மணிக்கு புறப்பட்டு, மட்டக்களப்புக்கான பாடுமீன் கடுகதி தொடருந்து, இன்றிலிருந்து இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 8:30க்கு மட்டக்களப்பை வந்தடையும்.
மேலும், இதுவரை குறிக்கப்பட்ட மாற்றங்கள் தவிர, மற்ற தொடருந்து சேவைகளில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பொதுமக்கள், புதிய நேர அட்டவணையை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு தொடருந்து திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.