அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க புதிய வழி


அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்து தீர்வுகளை மேற்கொள்ள 1924 என்ற இலக்கத்துக்கு வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று நலன்புரி நன்மைகள் சபையின் ஆணையாளர் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் தலைவர் ஜயந்த விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும திட்டத்தின் நடைமுறையாக்கத்தில் வடக்கு மாகாணம் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இந்த திட்டம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில், அனைத்து மாவட்டச் செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதில் கருத்துத் தெரிவித்த பிரதித் திட்டப் பணிப்பாளர் எஸ்.யு. சந்திரகுமாரன், “ஆளுநர் மூன்று மாதங்களுக்கு முன்பே இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். மேலும் அவர் கோரியதை தொடர்ந்து, குறிப்பிட்டுள்ள மனுக்களை மீளாய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம், மேலும் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் அவற்றை முடிக்க விருப்பம் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

கலந்துரையாடலின் போது, ஒவ்வொரு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலர்கள், அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொள்ளும் சவால்களை முன்வைத்தனர். வடக்கு மாகாணத்தில் மட்டுமே உள்ள சில விசேட சிக்கல்களையும் எடுத்துக்காட்டினர்.

இதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் சில நடைமுறைமைகளில் மாற்றங்களை கொண்டு வரவும், கொள்கை ரீதியான பிரச்சினைகளை கொழும்பில் மீண்டும் ஆராயவும் பிரதித் திட்டப் பணிப்பாளர் இணங்கியுள்ளார்.