இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் கண்டுபிடிப்பு! - வவுனியா மாணவன் சாதனை


வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நேற்று இடம்பெற்ற மாணவர் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு முறையைப் பயன்படுத்தி வாக்களிப்பு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அண்மையில் தேசிய மட்ட புத்தாக்கப் போட்டியில் முதலிடம் பெற்ற வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர் கபிலாசால் கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம், இலங்கை தேர்தல் முறையில் கடதாசி பாவனை இல்லாது மின்னணு வாக்களிப்பு செய்யலாம் என்பதற்கான முயற்சி புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ், வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் த. முகுந்தன், பாடசாலை அதிபர், அயல் பாடசாலை அதிபர்கள், கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்தினர்.

குறுகிய நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கையை முடித்து முடிவுகள் வெளியிடப்பட்டது என்பது இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.

இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் இலங்கையின் பொது தேர்தல் முறையிலும் மின்னணு வாக்களிப்பு முறையை நடைமுறைப்படுத்தும் அடிப்படை முயற்சியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.