அநுராதபுரம் வைத்தியசாலை பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் ; கைதான முன்னாள் இராணுவ வீரர்!
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital – Anuradhapura) வைத்தியர் விடுதியில், ஒரு பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்முறைக்கு உள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பொலிஸார் தெரிவித்ததன்படி, குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் கைது செய்யப்பட்டார். விசாரணையின் படி, அவர் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கைக்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய, இன்று (12) காலை 8 மணி முதல் 24 மணிநேரத்திற்கு இந்தப் பணிப்புறக்கணிப்பு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு நீதி கோருவதற்கும், வைத்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் நோக்கிலும், இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
