வாகன இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

 

வாகன இறக்குமதிக்காக இதுவரை 150 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் இதனிடையே, வாகன இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை எனவும் கூறியுள்ளார்.  


கொழும்பில் அண்மையில் நடைபெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர் பேரவையின் 26ஆவது கூட்டத்தில் பேசுகையில், அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  


அவர் மேலும் கூறியதாவது, வாகன இறக்குமதிக்காக வங்கிகள் திறக்கும் கடன் கடிதங்கள் தினசரி அறிக்கைகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  


ஓரளவு சுதந்திரமாக இயங்கக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்க இந்த வருட வரவு செலவு திட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொருளாதாரத்தில் சுதந்திரமான இயக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வளர்ச்சி வேகத்தை எட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  


பொருளாதாரத்தில் பெரிய அதிர்ச்சிகளை தவிர்த்து, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், பொருளாதாரம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களில் ரூபாவிற்கு தாங்க முடியாத அழுத்தங்கள் ஏற்படாத வகையில் தற்போதைய அரசாங்கம் அவதானத்துடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  


சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.