இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி இலங்கைக்கு விஜயம்!


இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நீடித்த அரசியல் தீர்வு, பிராந்திய பாதுகாப்பு, உத்திசார் இணைப்புத் திட்டங்கள் மற்றும் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த விஜயத்தின் முக்கிய அம்சமாக, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் விக்ரம் மிஸ்ரி தனித்தனியாகச் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பில், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துதல், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் உள்ளிட்ட விடயங்களில் இந்தியா தனது ஆதரவை வழங்க வேண்டும் என தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மலையகத் தமிழ் மக்களின் காணி உரிமை, வீடமைப்பு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவுள்ளன.

மேலும், இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு, எரிபொருள் குழாய், கடல்வழி போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய உத்திசார் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்தும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலுரிமை' கொள்கையின் கீழ் நடைபெறும் இந்த விஜயம், இலங்கை–இந்தியா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், நிலுவையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தும் முக்கிய இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.