மின்வெட்டு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்!


அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், மின் உற்பத்திப் பற்றாக்குறை காரணமாக நாட்டில் மின்வெட்டு ஏற்படாது என்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரிக் கப்பல்கள் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய முறையின் கீழ், இலங்கை நிலக்கரி நிறுவனமே (Lanka Coal Company) நிலக்கரி தொடர்பான பரிசோதனை அறிக்கைகளை நேரடியாகப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இடைத்தரகர்கள் ஊடாக ஏற்படக்கூடிய நிதி மற்றும் தரம் தொடர்பான மோசடிகளைத் தடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஓகஸ்ட் மாதம் முழுவதும் தீவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக, ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் புனல்மின் உற்பத்தியைத் தவிர்ந்த ஏனைய மின் உற்பத்தித் தேவைகளுக்கும் போதுமான நீர் கொள்ளளவு தற்போது நாட்டில் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் மின்சாரத் தேவையில் 48 சதவீதம் புனல்மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, மின் உற்பத்திப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு நாட்டின் எந்தப் பகுதியிலும் மின்வெட்டு ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.