இலங்கை – ஓமான் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!


ஓமான் சுல்தானகத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆலோசகர் பங்கஜ் கிம்ஜி மற்றும் ஓமான் சுல்தானகத்தின் தூதுவர் அகமட் பின் அலி பின் சயீத் அல்ரஷிடி ஆகியோர் நேற்று (12) வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவை சந்தித்தனர்.

இதன்போது, இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்துவது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான விருப்பத்தையும் இருதரப்பினரும் வெளிப்படுத்தினர்.

விவசாயம் மற்றும் சக்திவளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்துவதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிப்பதிலும் ஓமான் அதிக ஆர்வம் காட்டி வருவதாக பங்கஜ் கிம்ஜி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, ஓமான் தரப்பின் ஆர்வத்தை வரவேற்றதுடன், இலங்கையின் பல்வேறு துறைகளில் காணப்படும் பரந்தளவிலான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நாட்டில் தற்போது காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளில் பங்கேற்குமாறு ஓமான் முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில், இலங்கையுடன் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement) மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஓமான் தரப்பின் ஆர்வத்தை பங்கஜ் கிம்ஜி வெளிப்படுத்தினார்.

இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் வசந்த சமரசிங்க, அது தொடர்பில் பரிசீலிக்கவும் இணக்கம் தெரிவித்தார்.

இதன்மூலம், இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், வர்த்தகம், முதலீடு மற்றும் வணிகக் கூட்டாண்மைகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் பரஸ்பர ஆர்வம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.