இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை – பணத்தை பாதுகாக்குமாறு அறிவுறுத்தல்
குறுஞ்செய்தி (SMS), சமூக வலைத்தளங்கள் அல்லது இணையம் வழியாக பெறப்படும் தெரியாத இணைப்புகள் மூலம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (SLCERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
சமீப காலமாக, கடன் அட்டைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி, பணம் திருடும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் காரணமாக அட்டைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பல பிரபல வங்கிகளின் பெயர்களை பயன்படுத்தி இந்த மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் அட்டையை மீண்டும் செயல்படுத்த, குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பின் மூலம் தேசிய அடையாள அட்டை எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என அந்தச் செய்திகளில் குறிப்பிடப்படுகின்றது. மேலும், 24 மணி நேரத்திற்குள் தகவல் வழங்காவிட்டால் அட்டை இரத்து செய்யப்படும் அல்லது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.
இதனால் சிலர் அட்டைகள் ரத்து செய்யப்படுவதைத் தவிர்க்க உடனடியாக அந்த இணைப்புகளை திறந்து, தங்கள் முக்கிய தகவல்களை உள்ளிடுகின்றனர். பின்னர் மோசடி செய்பவர்கள் அந்த தகவல்களை பயன்படுத்தி, OTP எண்ணை பெற்றுக் கொண்டு வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுகின்றனர்.
மேலும், பொலிஸ் சீருடை அணிந்து அல்லது பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து, வாட்ஸ்அப் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொண்டு, தங்களை உதவி காவல் கண்காணிப்பாளர் என அறிமுகப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
ஒரு குற்றவாளி பொலிஸ் காவலில் இருப்பதாக கூறி, பல வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை முன்வைத்து, பாதிக்கப்பட்டவர்களை விசாரணை பெயரில் அழுத்தம் கொடுத்து, கைது செய்வதாக அச்சுறுத்தி லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்துள்ளதாக முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள,
தெரியாத இணைப்புகளை திறக்க வேண்டாம்
OTP எண்கள், அடையாள அட்டை விவரங்கள், வங்கி தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம்
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது செய்திகள் கிடைத்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியையோ அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள வேண்டும்
என இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
.jpeg)