மஹர சிறை சேதங்களை மதிப்பிட 5 பேர் கொண்ட குழு நியமனம்!


மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது கைதிகளால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களை மதிப்பிடுவதற்காக 5 பேர் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சேதங்களை துல்லியமாக கணக்கிடுவதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக புனரமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் நோக்கிலும் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கைதிகள் மேற்கொண்ட வன்முறைச் சம்பவத்தின் போது, மறுவாழ்வுப் பிரிவு கட்டிடம், பார்வையாளர்கள் சந்திப்பு பகுதி, சிறைச்சாலை வைத்தியசாலை, சமையலறை, பிரதான ஜெயிலரின் அலுவலகம் மற்றும் தொழிற்துறைப் பிரிவு உள்ளிட்ட பல நிர்வாகக் கட்டிடங்கள் தீக்கிரையாகி கடுமையாக சேதமடைந்துள்ளன.

கைதிகள் தங்கியிருந்த வார்டுகளைத் தவிர்த்து, நிர்வாகக் கட்டிடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, 2020 ஆம் ஆண்டு நவம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்ட இந்தக் கட்டிடங்களே மீண்டும் சேதமடைந்திருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற முழு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க 3 அதிகாரிகள் கொண்ட மற்றொரு விசாரணைக் குழுவும் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.