குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!


குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (05) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த தவணையில் சோகோ அதிகாரிகள், பிரதான சட்ட வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு காணிப் பதிவாளர், பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்களம் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் அறிவித்தல் வழங்கியிருந்தது.

இந்நிலையில், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் சார்பில் சட்டத்தரணி ஒருவர் மட்டுமே நீதிமன்றில் முன்னிலையானார். ஏனைய தரப்பினர் சமூகமளிக்காத காரணத்தால், வழக்கு மேலதிக விசாரணை மற்றும் வழக்கு மாநாட்டிற்காக எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.